
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தில் நில மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியினரை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி, முனி ரெட்டி ஆகிய இருவருடைய 50 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ரெட்டி அவரது மனைவி ரத்தினம்மாள் பெயரில் கடந்த 2006-ம் தேதி ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை பதிவு செய்து அபகரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சீனிவாச ரெட்டி மத்திகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓசூர் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் விசாரணை நடந்ததில் கடந்த 2010-ம் வருடம் கணவன் மனைவி இருவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து ராஜா ரெட்டி குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். 2018-ம் ஆண்டு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கடந்த 21.11.2022-ம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் வழங்கி உத்தரவிட்டது. தீர்ப்புக்கு பின் ராஜா ரெட்டி அவரது மனைவி ரத்தினம்மாள் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று காலை அவர்களை மத்திகிரி இன்ஸ்பெக்டர் சாவித்திரி கைது செய்து ஓசூர் (ஜேஎம் 2ல்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி விசாரணைக்கு பின் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர்களை வேலூர் சிறைச்சாலையில் அடைத்தனர். கோடிக்கணக்கில் மதிப்புடைய 50 ஏக்கர் சொத்துக்களை அபகரிக்க முயன்ற கணவன் மனைவி கைது செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.