‘One hundred day laborers should be allowed to do harvest work’ - Subramanian

கரூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயமே செய்ய முடியாமல் இருந்தது. இந்த வருடம் இரவை பாசனம் மூலமாக எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவை பல ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்து இரவு பகல் பாராமல் தண்ணீர் பாய்ச்சி, மயில் மற்றும் கால்நடைகளில் இருந்து காப்பாற்றி தற்போது அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டது. ஆனால், அறுவடை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலக்கடலை நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளன.

Advertisment

இதுபற்றி வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவரும், கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதியான சுப்பிரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 15 ஆயிரம் ஏக்கர், எள் 10 ஆயிரம் ஏக்கர், சூரியகாந்தி 8 ஆயிரம் ஏக்கர், மக்காச்சோளம் 5 ஆயிரம் ஏக்கர் என பயிரிடப்பட்டுள்ளன. ஆள் பற்றாக்குறை காரணமாக அறுவடை செய்ய முடியாமல், எண்ணெய் வித்துக்கள் நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளன. மேலும், மீதமுள்ள பயிர்களை மயில்கள் கொத்தி விட்டு செல்கின்றன. இவ்வாறு வீணாகக்கூடிய பயிர்களை போக மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

Advertisment

இத்தகைய தருவாயில், வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையாக எண்ணெய் வித்துக்களை அறுவடை செய்வதற்கு அவசரகால உதவியாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கி, கூட்டத்தொடரில் இதுபற்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும், 100 நாள் திட்ட பணியாளர்களை நிலக்கடலை பயிரை அறுவடை செய்ய பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.