Skip to main content

பசியை போக்கும் மனித நேயம்..! புகைப்படத்திற்கு முகம் காட்ட மறுக்கும் மனிதர்..!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021


 

சாலையின் முகப்பில் அரசு மருத்துவமனை.! அதன் அருகிலேயே நடைபயிலும் தூரத்திலுள்ளது அந்த பழக்கடை. பூட்டப்பட்ட கடையின் வாசலில், நிறைவாய் ஐந்து வாழைத்தார்கள் அங்கே தொங்க விடப்பட்டிருக்க, அதனூடே "பசித்தால் எடுத்து சாப்பிடவும்.! பழம் இலவசம்.! வீணாக்க வேண்டாம்.!" என்ற வாசகங்கள் அடங்கிய சிலேட்டு பலகையும் வைக்கப்பட்டிருக்கின்றது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்களும், பாதசாரிகளும் அதனை கவணித்து நின்று பறித்து தின்று பசியாறி செல்கின்றனர்.

 

கரோனா பெருந்தொற்றால் வேலையிழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியானாலும், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆங்காங்கே மனித நேய செயல்கள் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் பசியால் வாடும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியாய் பழத்தை கொடுத்து பசியாற்றி வருகின்றார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி எனும் பழவியாபாரி. கடலையூர் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அந்த பழக்கடை, அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு பூட்டிய கடையின் முன் தினசரி ஐந்து வாழைப்பழத் தார்களை கட்டி தொங்கவிடுகின்றார். அது பசியால் வருபவர்களை பசியாற்ற வைப்பதால் என்னற்ற மன திருப்தி அவருக்கு. "இந்த நேரத்தில் பசியாற்றுவது தான் முக்கியம்.! என்னால் முடிந்ததை செய்கின்றேன். இது பெரிய விஷயமல்ல.!" எனக் கூறிவிட்டு புகைப்படத்திற்கு கூட முகம் காட்ட மறுத்து நடையை கட்டுகின்றார் முத்துப்பாண்டி. செழிக்கட்டும் மனித நேயம்.!

 


படங்கள்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடி நிகழ்ச்சியின் அழைப்பிதழில் சர்ச்சை!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Controversy in Prime Minister Modi's program invitation

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கொங்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொங்கு பகுதியானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவுளி துறையிலும் சிறந்து விளங்குகிறது. தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக திருப்பூர் திகழ்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரையில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்கத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளுடனும் உரையாடினார். மாநாட்டில் உரையாற்றுகையில், “உலகளாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன. அதே சமயம் பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்கள், நம் சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களை கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Controversy in Prime Minister Modi's program invitation

மேலும் நாளை (28.02.2024) காலை 8.40 மணிக்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர், தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, கீதாஜீவன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் பெயர் இடம்பெறவில்லை. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் இடம் பெறாதது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.