திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வார விடுமுறை காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (13.07.2025) பள்ளி மூடப்பட்டியிருந்தது. அப்போது அங்கு நுழைந்த சமூக விரோதிகள் பள்ளியின் சமையலறையில் நுழைந்து அங்கு உள்ள பொருட்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளனர். அதோடு அங்கிருந்த தென்னை மற்றும் வாழை உள்ளிட்ட மரங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் மாணவர்கள் அருந்தக்கூடிய குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து மறுநாள் காலை (14.07.2025), மாணவர்களுக்குக் காலை உணவு சமைப்பதற்காகப் பள்ளியின் சமையலர்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காரியங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ், காளிதாஸ் மற்றும் செந்தில் ஆகிய 3 நபர்களைத் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவர்கள் 3 பேரும் மது போதையில் இருந்த போது இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.