thirumurugan gandhi Mukilan

சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி, முகிலன் போன்றோருக்கு சிறையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அவர்களை பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதோடு, அங்கு அவருக்கு கடுமையான மனித உரிமை மீறலும் நிகழ்த்தப்பட்டு வருவதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Advertisment

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக தோழர் திருமுருகன் காந்தி மீது பல போலியான வழக்குகள் புனைந்ததோடு, புதர் மண்டிய சுகாதாரமற்ற கட்டிடத்தில் உள்ள தனிமைச் சிறையில் அடைத்து வைத்து கடுமையான மனித உரிமை மீறலை தமிழக அரசு செய்து வருகின்றது.

அதோடு, முறையான உணவும் வழங்காமலும், அத்தியாவசிய மருத்துவ உதவியும் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறையில் வழங்கப்படும் சுகாதாரமற்ற உணவால் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவும் அவருடைய குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மூச்சு திணறல், வயிற்றுப் போக்கு, வாந்தி காரணமாகவும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்ததன் காரணமாகவும் சிறைக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார் தோழர் திருமுருகன் காந்தி.

சிறையில் அவரை சந்திக்க இயக்கத் தோழர்களும், குடும்பத்தினரும் சென்ற போதுதான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய மனித உரிமை மீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு இதுபோன்ற வேதனைகளை அளித்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடும் மனித உரிமை மீறலை தமிழக அரசு கையாண்டு வருகின்றது.

இதன் மூலம் மற்ற சமூக போராளிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் அடக்குமுறையை தமிழக அரசு கையாண்டு வருகின்றது. ஜனநாயகத்தை, மனித உரிமையை குழிதோண்டி புதைக்கும் இத்தகைய போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மக்களின் நலனுக்காக போராடிய காரணத்திற்காக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் திருமுருகன் காந்தி, தோழர் முகிலன் போன்றோருக்கு சிறையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.