Skip to main content

‘நீங்களே இப்படி இருந்தால் சிறைவாசிகள் எப்படி திருந்துவார்கள்?’ -தமிழகச் சிறைகளுக்கு காட்டமான ஒரு சுற்றறிக்கை!

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

‘மத்திய சிறை ஒன்றில் பணிபுரியும் உதவி சிறை அலுவலர், ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு, சிறையில் நடைபெறும் சிறை நிர்வாகம் தொடர்பான நிகழ்வுகளை உடனுக்குடன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.’

-கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து, தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளில் இதுவும் ஒன்று.

 

 How would the prisoners be like this? Circular for Tamil jails!

 

ஊடகங்களுடனான தொடர்பினைக் குறிப்பிட்டதாலோ என்னவோ, ரகசிய விசாரணை குறித்த இந்தச் சுற்றறிக்கை, அதிவேகமாக அனைத்து ஊடகங்களுக்கும் தவறாமல் போய்ச் சேர்ந்துவிட்டது.

சிறை என்பது வெளியில் குற்றம் செய்யும் குற்றவாளிகள், தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தி நல்வாழ்வு பெறுவதற்கான ஒரு இடமென்றும், சிறைகளில் கடமை உணர்வுடன் இருக்க வேண்டிய சிறை அலுவலர்கள்/பணியாளர்கள், ஒரு எடுத்துக்காட்டாகத் திகழாமல், முறைகேடுகளில் ஈடுபடுவதால், சிறைவாசிகள் திருந்துவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு, மேலும் குற்றச் செயல்களிலில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்துவிடும் என்றும்,  அதனால், சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகம் மீது அவமரியாதை மற்றும் அலட்சியப்போக்கு ஏற்படுவதுடன், சிறை நிர்வாகம் சீர்குலையும் ஆபத்தையும் உருவாக்குகிறது எனவும் அறிவுறுத்தியுள்ள அந்தச் சுற்றறிக்கையில் காணப்படும் முறைகேடுகளில் சில –

மத்திய சிறை ஒன்றில் பணிபுரியும் ஆண் செவிலி உதவியாளர்,  பணம் பெற்றுக்கொண்டு வெளிமருந்துகள் எடுத்துக்கொள்ள சிறைவாசிகளை அனுமதிக்கிறார். சிறை மருத்துவமனையில் உள்ள மருந்துகளை, அச்சிறை மருத்துவரின் தனியார் மருத்துவமனைக்குக் கடத்துகிறார்.

மாவட்டச்சிறை கண்காணிப்பாளர் ஒருவர், தனது குடும்பத்திற்கான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிவர சிறைவாசிகளின் உறவினர்களை வற்புறுத்துகிறார். மின் கட்டணம் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட, சிறைவாசிகளின் உறவினர்கள் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்கிறார்.

 

 How would the prisoners be like this? Circular for Tamil jails!


ஒரு சிறையில் முதல்நிலைக் காவலர், ஜாதிப் பற்றுடன் செயல்படுகிறார். ஜாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறார். மற்றொரு சிறையில்,இரண்டாம் நிலைக் காவலர் ஒருவர், விதிகளை மீறி சிறைவாசிகள் பலருடைய மனைவிகளிடம் தகாத உறவு வைத்திருக்கிறார்.

பல சிறைகளில்,  அலுவலர்களும் பணியாளர்களும், சிறைவாசிகளிடமிருந்து பெரும் தொகையைக் கையூட்டாகப் பெற்று, விருப்பம்போல் கைபேசிகள் பயன்படுத்துவதற்கும், போதைப் பொருட்கள் உட்கொள்வதற்கும், விரும்பிய வெளி உணவுகள் சாப்பிடுவதற்கும் அனுமதிக்கின்றனர். சிறைக் காவலர்களில் சிலர், பிரபல ரவுடிகள், மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்ட குழுத்தலைவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். அத்தகையோர்,   சிறைகளில் வேண்டிய வசதிகள் அனுபவிக்க அனுமதிக்கின்றனர்.

இன்னும் சில முறைகேடுகளையும் பட்டியலிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார்களுக்கு இடமளிக்காமல் சிறை நிர்வாகம் செயல்படவும்  அறிவுறுத்துகிறது அச்சுற்றறிக்கை.  

தமிழகத்தில் சிறை நிர்வாகம் சீர்குலைந்துவிடக் கூடாது என்ற கடமை உணர்வு வர வேண்டியவர்களுக்கு வந்தால் சரிதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.