
கரோனா நோய் தொற்று உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஊடகங்களை சேர்ந்த பலருக்கும் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சியிலுள்ள ஒரு தொலைகாட்சி செய்தியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, திருச்சி செய்தியாளர்கள் மத்தியில் பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிக்கு தமிழக முதல்வர் விசிட் வருகிறார் என்பதற்காக திருச்சியில் உள்ள மாவட்டத்தின் நிர்வாக அதிகாரிகள் முதல் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் வரை, கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிரபல தொலைகாட்சியை சேர்ந்த பெண் நிருபர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்க மறுத்தனர்.
இந்த நிலையில் மற்றொரு தொலைகாட்சியின் செய்தியாளர் ஒருவர் கரோனாவுக்கான அத்தனை அறிகுறியும் இருந்ததால், அவர் அதற்கான மாத்திரைகளை மெடிக்கலில் வாங்கி சாப்பிட்டு வீட்டிலே ஒய்வில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து வேலைக்கு வந்தவர். அரசு மருத்துமனைக்கு சென்று தானாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்திருக்கிறார்.
கரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் ரிசல்ட் வருகிற வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த செய்தியாளர் கரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்பு, பொதுவெளிகளில் பல இடங்களில் செய்தியாளர் நண்பர்களோடு பயணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் திருச்சியில் திமுக கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கரோனா பரிசோதனை செய்த தொலைகாட்சி செய்தியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த அவருக்கு தொலைபேசியில் சுகாதார அலுவலர்கள் கரோனா தொற்று உறுதியானது என்று சொல்லி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் இந்த தகவல் பெரிய கலக்கத்தை உண்டாக்கியது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
இதற்கு இடையில், தொடர்ச்சியாக இடைவெளி விட்டு கே.என்.நேரு கரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டிருக்கிறார். தொலைகாட்சி செய்தியாளர் வீடு மண்ணச்சநல்லூர், திருப்பஞ்சலியில் இருப்பதால் அங்கே அவருடய அம்மா, தங்கை ஆகியோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.