தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இயற்றிய இரு சட்ட மசோதாக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக்கூட அறியாதவராக இன்றுவரையிலும் இருப்பது கொடுமைதான்!

எந்த மசோதா? என்ன நடந்தது?

Advertisment

 How much does the government know? -Neet Deduction Bill

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

2017- 18 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன், இந்த இரு சட்ட மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற குழு பரிந்துரைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே தங்கள் சொந்த நடைமுறையைப் பின்பற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தால் அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது என்றும் அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கிடைத்திருக்கும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 2017 பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளதாகவும், அவற்றை 2017 செப்டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இரண்டு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இது எதுவுமே அறியாதவர்போல், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் “தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பிரதமரை அண்மையில் சந்தித்த போது கூட தமிழக அரசுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.” என்றார்.

Advertisment

 How much does the government know? -Neet Deduction Bill

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ “நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால் அந்தச் செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

நீட் தேர்வால் சமூக நீதிக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமின்றி, சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பைக் கனவில்கூட நினைக்க முடியாத நிலைமையை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது.” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக மக்களை ஏமாளிகளாக நினைக்கிறதா எடப்பாடி அரசு?