“தமிழக அரசு பாடம் கற்க இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்” - அண்ணாமலை

How many more rainy seasons are needed for the Tamil government to learn its lesson Annamalai

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், மழைநீர் தேங்கியுள்ள பல்வேறு இடங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் தொடர்ந்துஆய்வில் ஈடுபட்டு மழைநீர் தேங்காமல் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். அதே சமயம் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்த மக்களிடம் தொலைப்பேசி வாயிலாக குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

How many more rainy seasons are needed for the Tamil government to learn its lesson Annamalai

இந்நிலையில் பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னையில் பெய்த மழை குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக் காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Annamalai Chennai rain
இதையும் படியுங்கள்
Subscribe