Skip to main content

“தமிழகத்தின் மீதுதான் எத்தனை வகையான வஞ்சகம்” - சு. வெங்கடேசன் எம்.பி. ஆவேசம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

How many kinds of fraud is on Tamil says Su Venkatesan MP

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதனையடுத்து கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

அந்த அறிவிப்பின்படி, 5.25 கோடி வாக்காளர்களையும், 200 தொகுதிகளையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற இருந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நவம்பர் 23 ஆம் தேதி அதிகத் திருமணங்கள் நடைபெறும் முகூர்த்த நாள் என்பதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் தேதி மாற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “தேவ் உதானி ஏகாதசிக்காக ராஜஸ்தான் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்ட ஸ்டேட் வங்கி தேர்வை மாற்றச்சொல்லி கடைசி வரை போராடினோம். ஆனால் மமதையோடு மாற்ற மறுத்தது மத்திய அரசு. தமிழகத்தின் மீதுதான் எத்தனை வகையான வஞ்சகம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்பப் பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசிய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.