ADVERTISEMENT

''நாங்கள் எப்படித்தான் வாழ்வது'' - கோயம்பேடு சிறுவியாபாரிகள் போர்க்கொடி!  

10:14 AM Apr 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (08.04.2021) புதிய கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஷாப்பிங் மால் உட்பட பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வர இ-பதிவு வாங்கும் முறை தொடரும். திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10ஆம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்படுகிறது. ஏப்.10ஆம் தேதியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி; நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து தமிழக வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. நோய்க் கட்டுப்பாடு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடைவிதித்ததை எதிர்த்து சிறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்பேட்டை பொறுத்தவரை 1,800 க்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன. அந்தச் சிறுகடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் என அனைவரும் கோயம்பேடு வணிக வளாகத்தை முற்றுகையிட்டு இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ''ஏற்கனவே கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் இப்போதுதான் கடைகளை முழுமையாக திறக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் மீண்டும் தமிழக அரசு சில்லறை வியாபாரத்திற்கு தடைவிதித்தால் நாங்கள் எப்படித்தான் வாழ்வது. டாஸ்மாக்கை எல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் திறந்து வைக்கிறாங்க. ஆனால் சில்லறை கடைகளை மூடச் சொல்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT