/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_113.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகிலுள்ள தொழுவம் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் குரு (எ) பரமகுரு (41). பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் மீது, 2010 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் சிறைக்குச் சென்ற பரமகுரு, ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற உத்தரவின்படி மேற்படி வழக்குகளில் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்துவந்துள்ளார். இதனால் நீதிமன்றம் இவர்மீது பிடியாணை பிறப்பித்தது. காவல்துறையும் இவரை தீவிரமாக தேடிவந்தது. ஆனால், இவர் காவல்துறையிடம் சிக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளியாக இருந்துவந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றம் இவருக்குப் பிடியாணை பிறப்பித்துள்ளது. அதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் பரமகுருவை தேடிவந்தனர். இந்நிலையில், அவரது செல்ஃபோன் எண் மூலம் அவர் இருப்பிடத்தை தனிப்படை போலீசார் ரகசியமான முறையில் தேடி கண்டுபிடித்து, பரமகுருவை கைது செய்துள்ளனர். ஏழு ஆண்டுகளாக பல வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏமாற்றிவந்த பரமகுரு கைது செய்யப்பட்ட சம்பவம் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)