ADVERTISEMENT

'ஒற்றுமையே இல்லாத இந்தியா கூட்டணி எப்படி ஆட்சி நடத்தும்?' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

06:59 PM Apr 11, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஜி.வி கஜேந்திரனை ஆதரித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து மக்களுக்கு உணவளிப்பவர்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். விவசாயி எனச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிதான் எதற்கும் பயப்படமாட்டான். விவசாயம் என்பது ஒரு புனிதமான தொழில். அந்தப் புனிதமான தொழிலை ஸ்டாலின் கொச்சைப்படுத்தியுள்ளார். என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக் கொண்டு விவசாயிகளை அவமானப்படுத்தாதீர்கள். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் செழிப்போடு, நலமோடு இருந்தார்கள். இரண்டு முறை தொடக்க வேளாண்மை வங்கியில் பயிர்க்கடன் பெற்று இருந்தார்கள். அவற்றைத் தள்ளுபடி செய்தோம்.

ADVERTISEMENT

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். 2021 இல் நான் முதல்வராக இருந்த பொழுது தள்ளுபடி செய்தேன். 2017 ஆம் ஆண்டு நான் முதல்வராக பதவியேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. அப்படிப்பட்ட காலத்தில் கூட மக்களுக்கு தங்கு தடை இல்லாமல் குடிநீரை வழங்கினோம். நீங்கள் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளீர்களா? ஆனால் திறமையான அரசாங்கம் என்பதற்கு ஆதாரமாக தேசிய அளவில் பல விருதுகளை நாங்கள் பெற்றுள்ளோம். போக்குவரத்து துறையில் சிறப்பாக செயல்பட்டு விருதுகள் பெற்றோம். மின்சாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டு தேசிய அளவில் விருது பெற்றோம். உள்ளாட்சியில் சிறந்த நிர்வாகம் மிக்க அரசு என 140 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசு.

சமூக நலத்துறையில் விருது, உயர்கல்வியில் விருது, பொதுத்துறையில் விருதுகள். இப்படி துறையாக சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டிய அரசு அதிமுக அரசு. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டு வந்த பல நலத்திட்டங்களை ரத்து செய்ததே திமுகவின் ஒரே சாதனை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசீர்வாதம் உள்ளவரை அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT