Skip to main content

காதலர் தினம்: ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஒரு கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

ரொ


உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ஒரு கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணிசமான விவசாயிகள் ரோஜா மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.


ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன. பசுமைக்குடிகள் அமைத்து ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உருவெடுத்துள்ளது. 


தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், கார்வெட் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் பயிரிடப்படுகின்றன.


ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்களின்போது ஓசூர் ரோஜா மலர்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பும், சந்தை வாய்ப்பும் இருந்து வருகிறது. 


நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த பதினைந்து நாள்களுக்கு மேலாகவும் ஓசூரில் இருந்து பல நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டும் ஆஸ்திரேலியா, குவைத், துபாய், பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகளவில் ஓசூர் ரோஜாக்களுக்கு ஏற்றுமதி ஆணைகள் கிடைத்துள்ளன.


இதுகுறித்து ரோஜா மலர் விவசாயிகள் கூறுகையில், ''காதலர் தின விழாவையொட்டி ஓசூரில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்மூலம் மட்டுமே 5 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.


உள்ளூர் சந்தையில் 20 ரோஜா மலர்கள் கொண்ட ஒரு கொத்து, 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஒரு பூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் ரோஜா விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை அதிகரிப்பு!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Ahead of Valentine's Day, rose prices increase

காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை பிப். 14 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். குறிப்பாக ரோஜா பூக்களை காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு கொடுத்து அழகு பார்ப்பார்கள். ரோஜா பூக்களை அன்பின் வெளிப்பாடாகப்  பார்க்கின்றனர். இதனால் சாதாரண நாட்களை விடக் காதலர் தினத்தை ஒட்டி ரோஜா பூக்கள் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்து வருகிறது. 

பொதுவாக பெங்களூர், ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருந்து ரோஜாக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இன்று பெங்களூர், ஓசூரில் இருந்து ஈரோட்டுக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. மஞ்சள், சிவப்பு, பேபி பிங்க், டார்க் பிங்க், வெள்ளை, ஆரஞ்சு போன்ற கலர்களில் ரோஜா பூக்கள் இருக்கும். 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. 

கடந்த வாரம் 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 முதல் ரூ.180 வரை விற்பனையானது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்பனையாகி வருகிறது. பொதுவாக ஈரோடு மார்க்கெட்டிற்கு 2000 முதல் 2500 கட்டுகள் வரை ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் இன்று 4000 கட்டுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சில்லறை விலையில் ஒரு ரோஜா 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.