/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/99_47.jpg)
கோவை மாவட்டத்தில் வசித்து வரும் சுரேஷ்குமார், அம்மாநகர காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயச்சந்திரிகாவும் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டு வசதி வாரியத்தில் வீடு விற்பனை திட்டத்தில் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு, வ.உ.சி நகரில் உள்ள மத்திய வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த வீட்டின் உத்தேச விலை 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுக்கு, போலீஸ் தம்பதியினர், தவணை முறையில் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் வீடு தொடர்பான பொது அதிகாரத்தை, சுசேந்திரன் என்பவரிடம் சுரேஷ்குமார் வழங்கினார். வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பணம் அனைத்தையும் 2016ல் செலுத்தி முடித்தனர்.
இதனையடுத்து, வீட்டை தங்கள் பெயருக்கு பதிவு செய்வதற்காக, சான்றிதழ்களுடன் சுரேஷ்குமார் வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, அந்த வீடு சுசீந்திரன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது என தெரிய வர சுரேஷ்குமாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுசேந்திரன் அவருக்கு வழங்கிய பவரை தவறாக பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்தில் விற்பனை மற்றும் சேவைப்பிரிவு மேலாளராக பணியாற்றிய ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சுரேஷ்குமார் - ஜெயசந்திரிகா தம்பதியினர், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தனர். அதன்பேரில், வீட்டு வசதி அதிகாரி ஸ்ரீதர் மற்றும் சுசேந்திரன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடிக்கு முக்கிய காரணமான வீட்டு வசதி வாரிய அதிகாரி ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)