
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடந்தது. இதனையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் பகுதியில் நேற்று (01.12.2024) இரவு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்திலிருந்து சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மண் சரிவில் சுமார் 40 டன் எடை கொண்ட 14 அடி உயரப் பாறை ஒன்றும் உருண்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனப் பலரும் நேரில் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். ராஜ்குமார் என்பவரது வீட்டின் மேல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ஏழு பேர் இடிபாடுகள் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி மீனா, கௌதம் (வயது 8), வினியா (வயது 6), தேவிகா (வயது 16), வினோதினி (வயது 16), மகா (வயது 12) உட்பட 7 பேர் ஈடுபாடுகளில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் சம்பவம் நிகழ்ந்த இடம் குறுகலான பாதை என்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மரத்தை அறுக்கும் இயந்திரம் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக வீட்டின் மேற்கூரை உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சார்பில் மீட்புப் பணியில் மிசி மற்றும் ரூபி என்ற இரு மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.