
கட்டிய வீட்டை ஜாக்கியை வைத்து உயர்த்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பணியாளர் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கஜேந்திரன் மில் நகர் பகுதியைச் சேர்ந்த ஜம்மத் என்பவர் தான் கட்டிய வீடு பள்ளத்தில் இருப்பதாக நினைத்து அதன் உயரத்தை அதிகப்படுத்த முயன்றுள்ளார். இதற்காக ஜாக்கியை வைத்து வீட்டை மொத்தமாக உயர்த்தும் பணியானது நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதில் காமாட்சி என்ற 48 வயது நபரும் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது உயர்த்தப்பட்ட வீட்டின் முன்பகுதி படிக்கட்டு திடீரென சரிந்து விழுந்தது. இதில் படிக்கட்டுக்கு கீழே இருந்த மண்ணை அள்ளிக்கொண்டிருந்த தொழிலாளர் காமாட்சியின் படிக்கட்டுகள் விழுந்ததால் விபத்தில் சிக்கினார். இதில் பல்வேறு போராட்டங்களுக்கு பின் அவர் மீட்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தேனி பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.