
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல கிராமங்களில் வீடு புகுந்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜத்சதுர்வேதி குற்றவாளிகளை பிடிக்கத் தனிப்படை அமைத்தார். தனி படைப்பு போலீசார் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூத்தனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக போலீசாரிடம் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இரண்டு இளைஞர்களும் அண்ணன் தம்பி என்பதும், விஜய் மற்றும் அவரது தம்பி எலவனாசூர்கோட்டை திருக்கோவிலூர், திருநாவலூர் ஆகிய இடங்களில் தனியாக இருந்த பெண்களை குறி வைத்து 14 வீடுகளில் இருந்த நகை பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை அவரது தாய் வீரம்மாளிடம் கொடுத்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 41 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜய், அவரது சகோதரர் மற்றும் தாய் ஆகிய மூன்று வரையும் உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் சிறைக்கு அனுப்பினர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அண்ணன் தம்பி இருவரும் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தைச் செலவழித்ததால் அவர்கள் தனது தாயிடம் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்ததாகக் கூறி ஒப்படைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.