ADVERTISEMENT

ஓசூரில் பழிக்குப்பழியாக ரவுடி சரமாரி வெட்டிக்கொலை

08:39 AM Oct 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT




ஓசூர் அருகே, பழிக்குப்பழியாக ரவுடியை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளைத் தேடி காவல்துறையினர் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் முரளி (வயது 19). இவர். ஞாயிற்றுக்கிழமை (அக். 9) மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை சந்திக்க வந்துள்ளனர்.

முரளியும் அவர்களுடன் தனியாகச் சென்றார். பின்னர் மூவரும் மது அலசநத்தம் சாலையில்
பெத்தகொள்ளு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் லேஅவுட் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்போது முரளியை அழைத்து வந்த மர்ம நபர்கள் இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே அவர் பலியானார். முரளியின் உடலில் 13 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. இதையடுத்து கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.

முரளி சடலமாகக் கிடப்பது குறித்து அந்த வழியாகச் சென்றவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் ஓசூர் ஹட்கோ காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூராய்வுக்காக சடலத்தை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கொலையுண்ட முரளி, ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட் தொழிலுடன், வட்டித் தொழிலும் செய்து வந்தார். இவரை கடந்த பிப். 28ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக முரளி சேர்க்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட முரளி, பிணையில் விடுதலை ஆகியிருந்தார். இந்த நிலையில்தான் அவரை இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளனர். உதயகுமாரின் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் முரளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

முரளியை அழைத்துச் சென்ற இருவரும் அவருக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களாக இருக்கலாம் என்றும், அதனால்தான் அவர்களுடன் ஒதுக்குப்புறமான இடத்திற்கு மதுபானம் அருந்தச் சென்றிருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

இதற்கிடையே, கொலையாளிகள் கர்நாடகாவில் பதுங்கி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, எஸ்.ஐ. வினோத் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கர்நாடகா விரைந்துள்ளனர். ரகசிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் சர்ஜாபுரம், ஆனேக்கல், தெப்பக்கோடி உள்ளிட்ட இடங்களில் தேடி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT