
சிதம்பரம் அருகே உசுப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளைத் தங்கவைத்து, அனுமதி இல்லாமல் ஆக்சிஜன் வசதியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனுக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையில் எந்தவித அனுமதியும் இல்லாமல் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த 5 பேரை அவசர ஊர்த்தி மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையை மூடுவதற்கு சார் ஆட்சியர் மதுபாலன் உத்திரவிட்டார். அதனடிப்படையில் உசுப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரன், சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், சிதம்பரம் நகரக் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு பூட்டுப் போட்டு மூடினார்கள். மேலும், மறுஉத்தரவு வரும்வரை மருத்துவமனையைத் திறக்கக்கூடாது எனவும் அறிவித்துள்ளனர்.