
புதுக்கோட்டை மாவட்டத்தில் எநத ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகளை நட்டு விழா தொடங்குவது வழக்கம். அதே போல இளைஞர்களும், சிறுவர்களும் தங்கள் ஓய்வு நேரங்களில் குளம், ஏரி, சாலை ஓரங்கள் எனப் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து மரங்களாக வளர்ப்பதைச் சிறப்பாகச் செய்வார்கள். அதேபோல தற்போது குடிமராமத்துச் செய்யப்பட்டு வரும் குளம், ஏரிகளில் தன்னார்வமாகச் சிறுவர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஆவுடையார்கோயில் தாலுகாவில் நிலப்பரப்பு அதிகம் இருந்தாலும் அதற்கான மரங்கள் மிகக் குறைவு. இருக்கும் மரங்களும் நீரை உறிஞ்சிக்குடிக்கும் சீமைக் கருவேல மரங்கள் மட்டுமே அதிகம் உள்ள பகுதி. அதனால் அந்தப் பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இந்த நிலையில் தான் இளைஞர்கள் முன்னெடுத்து பலன் தரும் பலமரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இது குறித்து ஏம்பல் பகுதி இளைஞர்கள் கூறும் போது,ஏம்பல் சுற்றுவட்டார கண்மாய் நீர்ப் பிடிப்பு பகுதியில் மியாவாகி காடு அமைக்க தாங்கள்திட்டமிட்டு வருகிறோம்.மதகம், இச்சிக்கோட்டை, தாணிக்காடு பாசனதாரர் சங்க தலைவர்களின் முழு ஒத்துழைப்போடு மதகம் பசுமை சரவணன், ஞானம் ஆகியோர் தலைமையில் இதற்கான நிலம் செம்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் ஏம்பல் ஏணங்கம் போன்ற ஊர்களிள் பாசனதாரர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இம்முயற்சிக்குப் பெரிய அளவில் ஆதரவு அளிக்காத சூழலில் நம்பிக்கை ஊற்றாய் மதகம் சிறுவர்களின் பணி அமைந்தது.நேற்று காலை கண்மாய் பார்வையிட சென்ற மதகம் பாசனதாரர் சங்க நிர்வாகிகள் கண்மாய் கரையில் இருபுறமும் மிக நேர்த்தியாக மரக்கன்றுகள் நடப்பட்டு அதைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தனர்.
நாங்கள் ஒரு மாதமாக திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கும் பணி ஒரிரவில் நிகழ்ந்தால் ஆச்சரியமாக உள்ளது. இந்த நற்பணியைச் செய்தவர்கள் 5 ஆம் வகுப்புபடிக்கும் மதகம் சிறுவர்கள் என அறிந்த போது நம் கண்களில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை கீற்றுடன் கூடிய ஆனந்த கண்ணீரோடு மனம் நெகிழ்ந்தது என்றனர். மேலும் தொடர்ந்து ஏம்பல் பகுதியில் சீரமைக்கப்படும் ஏரி, குளங்களில் மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கிராமத்தில் இளைஞர்கள் முழு ஊரடங்கு நேரத்தில் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)