ADVERTISEMENT

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது வழங்கி கௌரவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் 

06:30 PM Sep 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் முயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழி கடந்த 2004 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற கலைஞரின் கனவினை நிறைவேற்ற, நடுவண் அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்துக் 'கலைஞர் செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை'யை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் 'கலைஞர் செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞரின் உருவச்சிலையும் அடங்கியதாகும். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநரும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலருமான முனைவர் க. இராமசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கிக் கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும். பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், மணிமேகலை வழக்குச் சொல்லகராதி, சங்க இலக்கியத்தில் கடல் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றங்களும் ஆகிய நூல்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT