
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அருகில் உள்ளது பாடியந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயி முருகன். இவர் கடந்த 6ஆம் தேதி காலை திருக்கோவிலூர் சென்றவர், தனது கை செலவுக்காக பணம் எடுப்பதற்கு அப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மெஷினில் ஏற்கனவே 9,000 ரூபாய் பணம் பாதி வெளியே வந்த நிலையில் இருந்துள்ளது. அந்தப் பணத்தை எடுத்த முருகன், அதில் 9 ஆயிரம் ரூபாய் இருப்பதை உறுதிசெய்துகொண்டு, இது யாருடைய பணம் என்று தெரியவில்லை. நமக்கு இது தேவையில்லை என்று மன உறுதியுடன் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு நேராக திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாபு, சப் - இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோரிடம் திருக்கோவிலூர் பள்ளிவாசல் அருகில் உள்ள ஏடிஎம் சென்டரில் பணம் எடுக்கச் சென்றபோது இந்தப் பணம் அந்த மெஷினில் இருந்து வெளியே வந்திருந்தது எனவே இந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறி கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம்மில் பணம் தவறவிட்டவர் யார் என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில், திருக்கோவிலூரை அடுத்துள்ள நரி ஏந்தல் கிராமத்தில் அரசு பஸ் டிரைவராகஉள்ள 45 வயது முரளி குமார் என்பது தெரியவந்தது.
மேலும், ஏடிஎம் இல் இருந்து வெளியே வந்தபடியிருந்த பணம் அவருடையது என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அந்த ஏடிஎம் சென்டர் சென்று ஏடிஎம் கார்டு போட்டு பணம் எடுப்பதற்கு முயற்சி செய்தபோது பணம் வரவில்லை, மெஷினில் பணம் இல்லை என நினைத்து தான் சென்றுவிட்டதாகவும், அதன் பிறகு அந்தப் பணம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து அரசு பஸ் டிரைவர் முரளிகுமாரிடம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் நேற்று (08.08.2021) அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். அடுத்தவர் பணம் வேண்டாம் என்று நேர்மையாக காவல் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்த முருகன் முன்னிலையில், முரளிகுமாரிடம் அவரது பணத்தை அளித்தனர். முருகனின் நேர்மையை அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். அப்போது முருகன், “நம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால் போதும். அடுத்தவர் பொருளோ, பணமோ நமக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டு சந்தோசத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)