
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் அண்மையில் சந்தித்திருந்தார். அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார்.
இந்நிலையில் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எப். (C.R.P.F. - Central Reserve Police Force) வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என மொத்தமாக 8இலிருந்து 11 பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் விஜய்க்குப் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது எனத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.