Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024) அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment