Holiday announcement for Tiruvallur district schools and colleges

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து பரவலாக விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அதே சமயம் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (15.11.2023) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.