Skip to main content

சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர் விசாரணை! -அதிகாரிகள் படையெடுப்பால் நோயாளிகள் கலக்கம்!

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
si

 

சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், ஐவர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவினர் இன்று சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். மருத்துவ மற்றும் ஊர்க சுகாதார சேவைகளின் கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையிலான இக்குழுவினர், சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரத்தவங்கி மருத்துவர், ரத்த வங்கி ஊழியர்கள், சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர் களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரத்த பரிசோதனை குறித்து ஆய்வு நடத்துவதற்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 


சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு மாறி மாறி மருத்துவத்துறை அதிகாரிகள் படையெடுத்து வருவதைப் பார்க்கின்ற நோயாளிகள் கலக்கத்தில் உள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Sivakasi viral cctv police arrested two

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும்  “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட,  “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.

Next Story

குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ministers who started the event of setting up small shops

சிவகாசி விஸ்வநத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாக காட்சி அளித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள், அன்றாடம் வேலை செய்யும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் இணைந்து விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இவர்கள் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பசுமைக் காடுகள் அமைக்க திட்டமிட்டனர். இவர்களுக்கு உதவ முன்வந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இடத்தைப் பார்வையிட்டு ஊராட்சித் தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்ததோடு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் பலமுறை சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கிச் சொன்னார்.

அதைத் தொடர்ந்து குறுங்காடுகள் அடர்வனம் அமைக்க அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அமைச்சர் சேகர்பாபு ஆணை வெளியிட்டார். இன்று காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 7 ஏக்கர் இடத்தில் குறுங்காடுகள் அடர்வனம் அமைக்கும் நிகழ்வு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினர். இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. சதன் திருமலைக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் கண்ணன், பா.வேல்முருகன், ஆர்.எஸ். இரமேஷ், இல.சுதா பாலசுப்பிரமணியன், முனியசாமி பசும்பொன் மனோகரன், மார நாடு, ஜெயராமன், வி.கே.சுரேஷ், மதிமுக சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகுமார், சிவகாசி மேயர் சங்கீதா, இன்பம் ஒன்றியச் சேர்மன் விவேகன்ராஜ், ஊராட்சி தலைவர் ஏ.எல். நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டக் கழக முன்னணி நிர்வாகிகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக அரங்கில் அமைக்கப்பட்ட திரையில் திரையிடப்பட்டது. துரை வைகோவின் முயற்சிகளையும் பூமித்தாயை காப்பதில் துரை வைகோ கொண்டிருக்கும் அக்கறையையும் துல்லியமாக குறும்படம் எடுத்துரைத்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமைச்சர்கள் தங்களது பேச்சில் அதனை உள் வாங்கி துரை வைகோவை பாராட்டினர்.