/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3966.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கல்குவாரிகள் முறையான அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு இல்லாமலும் செயல்படுவதாக கிராம மக்கள் நீதிமன்றங்களை நாடியுள்ளனர். இதற்கு பதில் சொல்ல அரசு அதிகாரிகள் நீதிமன்றங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் உடையாளிப்பட்டி அருகே ராக்கத்தான்பட்டி ஊராட்சி கிள்ளுக்குளவாய்பட்டி கிராமத்தில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியில் ஆழமாக வெட்டி பாறைகள் உடைக்கப்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பொக்லைன் இயக்குநராக அன்னவாசல் காட்டுப்பட்டி லெட்சுமணன் வேலை செய்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (7.5.2023) காலை ஆழத்தில் நின்ற பொக்லைனுக்கு டீசல் நிரப்புவதற்காக லெட்சுமணன் மேலே கொண்டு வர ஓட்டிக் கொண்டிருந்த போது சில நாட்களாக பெய்த கனமழையால் மேலே மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு பாறைகளும் உருண்டு பொக்லைன் மேல் கொட்டி மண் மூடியது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த ஒரு பணியாளர் பொக்லைன் மண் மூடிக்கிடப்பதை பார்த்து வெளியே தகவல் சொல்ல தீயணைப்பு வீரர்கள் வந்து பொதுமக்கள், இளைஞர்கள் உதவியோடு லெட்சுமணனை மீட்கப் போராடினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1461.jpg)
தகவல் அறிந்து அங்கு வந்த கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அங்கேயே நின்று லெட்சுமணனை மீட்கும் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருந்தார். அரசு அதிகாரிகள் வந்துவிட்டனர். தகவல் அறிந்து லெட்சுமணன் உறவினர்களும் குவிந்துவிட்டனர். சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு லெட்சுமணன் சடலமாக மீட்கப்பட்டார். திரண்டிருந்த உறவினர்கள் எம்.எல்.ஏ சின்னத்துரையை கட்டிப்பிடித்து கதறியதுடன், குவாரி நிரவாகம் உரிய இழப்பீடு தரவில்லை என்றால் சடலத்தை ஏற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். உரிய இழப்பீடு பெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகே சடலம் மேலே கொண்டுவரப்பட்டு, பிறகு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
லெட்சுமணனை உயிருடன் மீட்க வேண்டும் என்று பல மணி நேரம் காத்திருந்த சின்னத்துரை எம்.எல்.ஏ, “இது போன்ற குவாரிகள் முழுமையான அனுமதியோடு அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்குகிறதா? பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ஏன் அதிகாரிகள் கண்டுகொள்ளத்தவறினார்கள் என்பது பற்றியெல்லாம் மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மண் சரிவால் உயிரிழந்த பொக்லைன் இயக்குநர் லெட்சுமணன் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். குவாரி நிர்வாகமும் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு படிப்பிற்கு ஏற்ப அரசு வேலை வழங்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைப்பேன்” என்றார்.
பல இடங்களில் அதிகமான வெடிகள் வைப்பதால் வீடுகள் சேதமடைவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும்சட்டவிரோத குவாரிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)