
தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் பயிற்சி வாரியம்(SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். இந்த வரலாற்று பிழையை உரிய தரவுகளோடு விளக்கி, பாடப்புத்தகத்தில் இருந்து குறிப்பிட்ட பிழையை நீக்குமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்சின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதாவது, எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42- வது ராஜா சந்திர சைதன்யா, அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த கோரிக்கை மனுவை அளித்ததோடு, பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டியும், அது எப்படி தவறானது என்பதையும் விரிவாக அமைச்சரிடம் விவரித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சந்திர சைதன்யா சுட்டிக்காட்டியதை முழுமையாக உள்வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு கோரிக்கையை தாமதப்படுத்தாமல், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர் அன்பில் மகேஷ், உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.