
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள பகுதிக்கு மறைந்த பிரபல பாடகர் 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகன் எஸ்பி.சரண் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''மறைந்த பாடகர் எஸ்.பி.பி வாழ்ந்த இந்த காம்தார் நகர் முதல் தெருவிற்கு அவருடைய நினைவாக அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர், அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். தமிழக முதல்வர் உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்று சென்ற ஆண்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நானும், அமைச்சர்கள் பெருமக்களும் இன்று அரசின் சார்பாக அதற்கான பதாகையை திறந்து வைத்திருக்கிறோம். அவருடைய குடும்பத்தினர் இதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்'' என்றார்.