His dedication will forever be an inspiration Rahul Gandhi MP Condolence

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 76) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் அவரது உடல்நிலையைச் சீராக்க மருத்துவர்கள் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார்.

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த மாதம் 13ஆம் தேதி (13.11.2024) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14.12.2024) காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நாளை (15.12.2024) ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் காங்கிரஸ் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் நாளை மாலை சென்னையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

His dedication will forever be an inspiration Rahul Gandhi MP Condolence

Advertisment

இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அச்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான தலைவர் ஆவர். அவர் காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஒரு உறுதியான பிடிப்புள்ளவராக இருந்தார். அவரது அர்ப்பணிப்பும் சேவையும் தமிழ்நாட்டிற்கு என்றென்றும் உத்வேகமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.