/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2421.jpg)
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இன்று (15.12.2021) திருச்சி குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தக் குமார வயலூர் கோவில் 1,200 ஆண்டுகள் பழமையான கோவில். ஆகமவிதிப்படி 2018ஆம் ஆண்டே இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட தாமதத்தை ஒதுக்கிவிட்டு தற்போது இந்தக் கோவில் திருப்பணிக்கான உரிய அறிவுரைகளை துறை ஆணையர்கள் வழங்கியுள்ளனர்.
இந்தக் கோவிலைப் பொறுத்தவரை கோவிலுக்கென்று ஒரு மரத்தேர் உள்ளது. அந்த மரத்தேரை முழுமையாகப் பராமரிக்கவும், இன்னும் அந்த தேர் மெருகூட்டப்பட மூங்கில், சவுக்கு உள்ளிட்டவைகளை அகற்றிவிட்டு கலை நுட்பத்துடன் தேக்கு மரத்தில் செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். இந்தக் கோவில்களில் அமைந்துள்ள வாரியார் மண்டபம், வள்ளி மண்டபம் இரண்டையும் முறையாகப் புனரமைக்க கேட்டுக்கொண்டுள்ளோம். அன்னதானம் போடும் இடமும், திருமணம் முடிந்தவுடன் உணவு பரிமாறும் இடமும் செப்பனிட அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் திருக்கோவில் குளத்தை முழுமையாக செப்பனிடவும், குளத்திற்கு வெளியில் இருந்துவரும் தண்ணீர் வெளியேற்றுவதற்கும், நிரப்புவதற்கும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை நாடியுள்ளோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_619.jpg)
எனவே இந்தக் கோவிலை முழுமையாகப் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. 15 மாதங்களுக்குள் இந்தப் பணிகள் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கோவிலில் தேவைப்படும் பணிகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். திருக்கோவில் கட்டுமான பணியோடு சேர்த்து மண்டபத்தில் உள்ள பணிகளும் தற்காலிகமாக சரி செய்யப்படும். அதன்பிறகு முழமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், “மதநல்லிணக்கத்தைப் போற்றும் தமிழகத்திற்குள் கோவில்களில் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இதுகுறித்து கோவில் முக்கியஸ்தர்கள், சட்டவல்லுநர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துபேசி இதற்கான தீர்வு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அதேபோல் அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் திருச்சி சமயபுரம் கோவிலில் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றது. அதை உடனடியாக துறை கூடுதல் ஆணையர் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலிலும் இதுபோன்ற பிரச்சனையைக் கொண்டுவந்துள்ளீர்கள். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_170.jpg)
தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்ந்தவர், தாழ்ந்தவர், இட்டார், பெரியோர், இடாதோர், இழிகுலத்தோர் என்பதை மாற்றும் அரசாக தற்போது செயல்பட்டு வருகிறது. அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சனைகளில் நடுநிலைமையோடு நின்று அனைவருக்குமான உரிமையைப்பெற்றுத் தருவதற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஜாகீர் உசேன் புகார் அளித்துள்ளார். இணை ஆணையர் மாரிமுத்துவும் புகார் மனு அளித்துள்ளார். அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார். இதுகுறித்த முழுமையாக அறிக்கையைப் பெற்று நடுநிலையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக அறங்காவலர் குழு என்பது அமைக்கப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு அறங்காவலர்கள் இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதைக் கண்டறிந்து, படிப்படியாக தற்போது 300 கோவில்களுக்கு அறங்காவலர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு, பாரபட்சமின்றி அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான பணி நடைபெறும்.
கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை செய்திகளாக வழங்க அதிகாரிகள் தரப்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தகவல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்து அறநிலையத்துறை எந்தப் பூஜைக்கும் தடை விதித்ததில்லை. ஒருவேளை அப்படி பூஜை செய்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டால், அதை உடனடியாக அறநிலையத்துறை சரி செய்யும். அனைத்தையும் சட்ட ரீதியாக, சட்டத்தின் உதவியோடுதான் செய்ய முடியும். பிரிவினைவாதத்தை ஏற்படுத்துகிறதை அறநிலையத்துறை ஏற்காது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_45.jpg)
திமுக ஆட்சி அமைந்தவுடன் 541 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாத கோவில்களில் திருப்பணிகள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளோடு கலந்தாலோசித்துவருகிறோம். நேற்று சோளிங்கருக்குச் சென்றோம்; 11 கோடி ரூபாய் தனியார் பங்களிப்போடு ரோப் கார் அமைவதற்கான அணுகு சாலைகள், தண்ணீர் வசதி, பூங்காக்கள், வாகன நிறுத்தங்கள், 1967இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் வெளிநாடுகள், உள்நாட்டு பகுதிகளில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், தற்போது இருக்கும் சிலைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)