Skip to main content

விருத்தகிரீஸ்வரர் கோயில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் அகற்றம்... அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை! 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

VIRUDHACHALAM TEMPLES CUDDALORE DISTRICT OFFICERS AND POLICE

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 4 கால பூஜை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது. மேலும், மாசிமகம் கோயிலின் ஆண்டுத் திருவிழாவாக 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். இதனால் கோயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தரிசனம் செய்வதற்கு இட வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுவதுடன், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தவும் இடவசதியின்றி சிரமப்படுகின்றனர். 

 

அதேசமயம் கோயிலின் நான்கு வீதிகள் மற்றும் கோயில் முன்வாயில் பகுதியில் கிழக்கு ராஜகோபுரம் எதிரே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் கடந்த 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 5 தேர்களும் எரிந்து சாம்பலாகின. இதனால் தேர் நிறுத்தும் இடம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக அருகில் உள்ள 32 கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணைய நீதிமன்றம் சென்னை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய நீதிமன்றம் விழுப்புரம் ஆகிய 2 நீதிமன்றங்களும் கோயில் எதிரே தேரடி அருகிலுள்ள 32 கடைகளையும் அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. 

VIRUDHACHALAM TEMPLES CUDDALORE DISTRICT OFFICERS AND POLICE

 

அதன் அடிப்படையில் நேற்று (15.07.2021) 32 கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதில் 9 கடைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், மீதமுள்ள 23 கடைகளை அகற்றும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பாளர்களிடம், தாங்களாக கடைகளைக் காலி செய்துகொள்ள வேண்டும் என எச்சரித்தும், அவர்கள் காலி செய்யாமல் அலட்சியம் காட்டிவந்தனர். மேலும் காலி செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டனர். ஏற்கனவே பலமுறை அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்தும் காலி செய்யவில்லை. அதனால் இந்தமுறை கால அவகாசம் எதுவும் கிடையாது என கூறி அதிரடியாக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது கடையின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் டி.எஸ்.பி மோகன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், கோயில் செயல் அலுவலர்கள் விருத்தாசலம் முத்துராஜா, மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் மாலா மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் செயல் அலுவலர்கள் முன்னிலையில் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. 

 

உதவி ஆணையர் பரணிதரன் செய்தியாளர்களிடம்  கூறுகையில், "கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்குப் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் கடைகளைக் காலி செய்ய மறுத்ததன் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி வழக்கு கோயிலுக்கு சாதகமாக 32 கடைகளை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் ஒத்துழைப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.  

VIRUDHACHALAM TEMPLES CUDDALORE DISTRICT OFFICERS AND POLICE

 

மேலும், படிப்படியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடும். தற்போது வழக்குகள் அனைத்தும் முடிவான பின்பு மீதமுள்ள கடைகள் அகற்றப்படும். அதுபோல் கோயிலின் நுழைவாயில் முன்பு அசைவ உணவுகள் தயாரிக்கும் ஓட்டல்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கின் முடிவு வந்த பிறகு அந்த நடவடிக்கையில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.