Skip to main content

ராமர் கோவில் குடமுழுக்கு; தடையை மீறித் திரையிட இந்து அமைப்புகள் திட்டம்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Hindu organizations plan to defy ban in Trichy to screen Ram Temple Kudamukku

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நிகழ்வு குறித்த காட்சிகளை, அரசு தடை விதித்தாலும் அதையும் மீறிக் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அயோத்தியில் ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இது தொடர்பான காணொளி காட்சிகளை நாடு முழுவதும் காட்சிப்படுத்த இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் இவற்றுக்கு அரசு தடை விதித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்குத் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மறுப்பும் தெரிவித்து வருகின்றது.

இது குறித்து திருச்சி மாநகர போலீஸார் கூறுகையில், பாஜக பொன்மலை மண்டல தலைவர் அருண் என்பவர் கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அயோத்தி நிகழ்வுகளை எல்.இ.டி திரை மூலம் காட்சிப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. திருச்சி மாநகரில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடைமுறைச் சட்டம் அமலில் இருப்பதால், பொது இடங்களில் கூட்டம் மற்றும் போராட்டம் நடத்தக்கூடாது. எனவே, அயோத்தி நிகழ்வுகளை எல்இடி திரை மூலம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு தடை விதித்தாலும், காவல்துறையினர் அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளிலும், அயோத்தி நிகழ்வு குறித்த காணொளி காட்சிப்படுத்தப்படும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அரசும், காவல்துறையும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தடையை மீறி அயோத்தி நிகழ்வுகள் திருச்சியில் திரையிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்