ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடந்தது. அப்போது ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர்தலைமையில் அந்த அமைப்பின் சில நிர்வாகிகள் ஆடு, சேவல், டியூப் லைட், குழாய், போன்றவற்றுடன் வந்தனர்.

Advertisment

hindu organisation petition in erode collector office

கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை நுழைவாயில் முன்பு தடுத்து நிறுத்தி ஆட்டுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனை தொடர்ந்து ஆட்டையும் சேவலையும் அலுவலகத்தின் வெளியே கயிறு போட்டு கட்டிவிட்டு உள்ளே சென்று மனு கொடுத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது, "பொங்கல் திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, கிடாய் முட்டு, ரேக்ளா ரேஸ், சிலம்பு, கபடி போன்ற பாரம்பரியமான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் தமிழக இளைஞர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தக் கூடியது. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, கிடாய் முட்டு, போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடை உள்ளது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் கொண்டு வந்து பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதைப் போன்று சேவற்கட்டு, கிடாய் முட்டு, ரேக்ளா ரேஸ், போன்ற போட்டிகளும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அதற்கு, "நிருபர்கள் மத்தியில் உங்களின் பா.ஜ.க அரசு தானே நடக்கிறது. பா.ஜ.க. சொல்வதை தமிழக அரசு கேட்குமல்லவா" என்றதற்கு, சேவற் கட்டு, கிடாய் முட்டு எல்லாம் சூதாட்ட கணக்கில் வருகிறதாம் நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். மக்கள் போராடினால் தான் வெற்றி பெற முடியும் " என கூறிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது அங்கு வந்த இந்து முன்னனி நிர்வாகி ஒருவர், "அண்ணே வெளியே கட்டியிருந்த ஆட்டையும் சேவலையும் காணவில்லை வெறும் கயிறு தான் இருக்குது. யாரோ கொண்டு போயிட்டாங்க" என அலறலுடன் கூற "ஏப்பா நல்லா பாருங்கப்பா நம்மாளுக யாராவது பத்திரமா புடுச்சு வெச்சிருப்பாங்க" என நிர்வாகிகள் கூற அண்னே நாமமொத்தம் 8 பேர் வந்தோம் இங்க கணக்கு சரியா இருக்கு என்றனர். அடப்பாவி ஆட்டுக்கு ஐயாயிரம் சேவலுக்கு ஐநூறு போச்சா... என புலம்பியவாரே நிருபர்களிடம் பேசாமல் போய் விட்டனர்.