ADVERTISEMENT

“உள்ளம் முழுக்க இந்திவெறி” - மத்திய அரசை சாடிய சு. வெங்கடேசன் எம்.பி.

11:29 AM Aug 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதனிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் அவையிலிருந்த அனைவரும் குரல் எழுப்பினர். குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியில் முடிந்தது என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரத் நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிகள் சட்டத்தை பாரத் சாக்‌ஷ்யா எனவும் பெயர் மாற்றம் செய்யும் சட்டத்திருத்த மசோதா எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், “இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்ச சன்கிதா, பாரதீய சாக்சிய... என கடைசி நாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு. உதடுகளில் திருக்குறள்...பாரதி... உள்ளம் முழுக்க இந்திவெறி. இது பாஜகவின் உண்மை முகம்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT