Skip to main content

இந்தி உங்களின் தாய் மொழி...எங்களுடையது அல்ல - ஜம்பு சாரியாவுக்கு மதுரை எம்.பி கண்டனம்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

x

 

இந்தியத் தணிக்கையாளர் கழகத் தலைவர் ஜம்பு சாரியா "தாய் மொழியான இந்தியின் ஆற்றலை உணர்ந்து அதை இந்தியத் தணிக்கையாளர் கழகம் தனது பணிக் கலாச்சாரத்தில் இணைத்து மேம்படுத்த வேண்டும்" என்று அக்கழகத்தின் "தி சார்டர்ட் அக்கவுன்டன்ட்" இதழில் எழுதியுள்ளார். அக்கழகத்தின் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் தணிக்கையாளர் கழகத் தலைவர் ஜம்பு சாரியாவுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

 

அந்த கடிதத்தில், " திரு ஜம்பு சாரியா அவர்களே, உங்கள் கூற்று அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் 19500 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக, மேலும் 28 மொழிகள் ஒரு லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக உள்ளது. இந்தி எல்லாருக்குமான தாய் மொழி அல்ல. உங்கள் கழகத்தில் உள்ள எல்லா தணிக்கையாளர்களுக்குமான தாய் மொழியும் அல்ல. உங்கள் கழகத்தின் சேவையைப் பயன்படுத்துகிற எல்லாருக்குமானதும் அல்ல. ஆகவே உங்கள் கூற்று உண்மையும் அல்ல. இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்திற்கும் எதிரானது. 

 

மேலும் உங்கள் நிறுவனம் நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு உடையது. பிராந்திய மொழிகள் என்ற தலைப்பிலான பிரிவுகள் 345, 346 ஐ படித்துப் பாருங்கள். இந்தி பேசாத மாநிலங்கள் மீது அதைத் திணிக்க முடியாது. மாநில சட்ட மன்றங்கள் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று சொல்கிற வரை ஒன்றிய அரசுத் துறைகள், அதன் தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனம் 8 வது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்து இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. ஆகவே உங்கள் கழகமும் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். சட்டத்திற்கு விரோதமான அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

 

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே  இந்தியைச் சொந்த மொழியாகக் கொண்டவர்கள் 39 % பேரே. திரு ஜம்புசாரியா! இந்தி உங்களின் தாய் மொழியாக இருக்கலாம். அதன் மீது உங்களுக்கு அளவற்ற பற்று இருக்கலாம். எனது தாய் மொழி தமிழ். எனக்கு என் தாய் மொழியின் மீது உள்ள பற்று உங்களை விட அதிகமானது. எனக்கு மட்டுமல்ல உங்களின் தணிக்கை முடிவுகளை நம்பி பயன்படுத்துகிற ஒவ்வொரு குடி மக்களுக்கும் அவரவர் தாய் மொழி மீது அளவற்ற பற்று உண்டு. உங்கள் கூற்று இந்தி  பேசாத மாநிலங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும்.  ஆகவே உங்கள் "தாய் மொழி" கருத்து திரும்பப் பெறப்பட வேண்டும். அரசியல் சாசன நெறிகளுக்கு உட்பட்டு உங்கள் கழகத்தின் மொழிப் பயன்பாடு அமைய வேண்டும்.  தமிழகம் என்றும் இந்தித் திணிப்பை அனுமதிக்காது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் மோடி' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Which face is Modi coming with'- CM Stalin's lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரை ரிங் ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''சு.வெங்கடேசனையும், கார்த்தி சிதம்பரத்தையும் மீண்டும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்.

இன்னும் ஒரே வரியில் சொன்னால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மாதிரி நிச்சயம் இருக்க மாட்டார். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி இப்பொழுது வாக்கு கேட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தால் தவிச்சாங்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தாரா? இல்லை. எந்த முகத்தோடு மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற எல்லா மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வாங்கக்கூட உச்சநீதிமன்றத்திற்கு போகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். மோடி கர்நாடகா வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த ரெண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லி சாலையில் போராடுகின்ற அவலநிலையை உருவாக்கி இருக்கிறார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதேநிலைமைதான். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தார். ஆளுங்கட்சியை உடைத்து இப்பொழுது அந்த மாநிலத்தையும் நாசமாக்கி விட்டார்கள். அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரை கைது செய்துள்ளார். டெல்லி, பஞ்சாபிலும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் இ.டி, ஐ.டி, சிபிஐ, மற்றும் கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா'' என்றார்.