/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jothimani434555.jpg)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (19/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிராஜன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க. முகவர் கிரிராஜன் கூறியதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், பிற கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடம் பா.ஜ.க. முகவர் கிரிராஜன் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், பிற கட்சிகளின் முகவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, வாக்குச் சாவடி மையத்தில் இருந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றிய காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, பா.ஜ.க. முகவர் கிரிராஜன் மீண்டும் வாக்குச்சாவடி மையத்துக்கு நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பா.ஜ.க.வின் மாற்று முகவர் வந்ததும் மீண்டும் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த வாக்குச்சாவடி மையத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
ஹிஜாப்பை அகற்ற வலியறுத்தியதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் ஹிஜாப் விவகாரத்தை கிளப்பி, மத அரசியல் செய்ய நினைக்கும் பா.ஜ.க.வினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, தமிழ் மொழி,பண்பாடு, அமைதி, நல்லிணக்கம் என்று வாழும் தொன்மையான நமது தமிழ் மண்ணில் பா.ஜ.க.வின் கலவர அரசியலுக்கு இடம் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)