Highways Department Accountants Selection  Case .. Postponed to June ..!

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி நியமனத்தில் 2016ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிவழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

அந்தத் தேர்வில் தேர்வான 10 பேரின் தேர்வை ரத்து செய்ய அரசு செயலாளர் பரிந்துரை செய்திருந்ததாகவும், ஆனால் நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் 8 பேரின் தேர்ச்சியை மட்டுமே ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு போல, விடைத்தாள் மாற்றம் செய்து முறைகேடு மூலம் தேர்வு முடிவுகளை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளதாகவும், ஏற்கனவே மண்டல கணக்காளர் மீது நான்கரை லட்ச ரூபாய் அளவிற்கு லஞ்ச ஒழிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தேர்வு குறித்து முழுமையாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (20.04.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு தலைமை கணக்காளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைமை கணக்காளர் நடத்திய விசாரணையில், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 16 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.