higher secondary schools, polytechnic colleges tn govt chennai high court

Advertisment

மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளன என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, மார்ச் மாத இறுதியில் 10- ஆவது வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

ஆனால்,பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை,பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24-இல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும். தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளிவைக்க வேண்டும். தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 21- ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் வெளியாக ஒரு மாதமாகும். ஆனால், மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 24- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித்தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கப்பட உள்ளன என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 25- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.