higher education has destroyed the very purpose of the meeting says OPS

உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் என்று கூறி கூட்டத்தைக் கூட்டிவிட்டு, உயர்கல்வி மேம்பாடு குறித்து வாய் திறக்காதது கூட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்கல்வியின் ஆணிவேராகத் திகழ்பவை பல்கலைக்கழகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாட்கள் முன்பு முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் என்று கூறி கூட்டத்தைக் கூட்டிவிட்டு, உயர்கல்வி மேம்பாடு குறித்து வாய் திறக்காதது கூட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது.

Advertisment

தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பட வேண்டுமென்றால், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள், பதிவாளர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்தல், பல்கலைக்கழகங்களின் வருமானத்தை அதிகரித்தல், பல்கலைக்கழகங்களின் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தல், பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கல்வியின் தரத்தை உயர்த்துதல் போன்றவற்றிற்கு தீர்வு காண்பது மிக மிக அவசியம்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வியை உயர்த்தக்கூடிய காரணிகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை. மாறாக, உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், மூன்று தூண்களை உள்ளடக்கிய பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை குறித்தும் முதல்-அமைச்சர் பொதுவாக பேசி இருக்கிறார். இவற்றிற்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்குவது குறித்து முதலமைச்சர் ஏதும் பேசாதது கல்வியாளர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைக்கு சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத அவல நிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட 75 சதவீத ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு கண்டால்தான் உயர்கல்வி உயரத்தில் இருக்கும். ஆனால், இவற்றிற்கெல்லாம் தீர்வு காணாமல், உலகத்தரம் வாய்ந்த கல்வி குறித்து பேசுவது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது.

Advertisment

எனவே, முதலமைச்சர், பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து தேவையான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கவும், துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி நிர்வாகத்தை சீரமைக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.