Skip to main content

‘என் தமிழினத்தைக் கொன்று குவித்த இலங்கைக்கு உதவுவதா?’ - ஒருநாள் சம்பளத்தை விட்டுத்தர மறுக்கும் தலைமைக் காவலர்! 

 

Highcourt Head Constable written letter to assistant commissioner

 

‘அரசாங்க உத்தரவுக்கு நான் செவிமடுக்காமல் இருக்கமுடியுமா? அரசு ஊழியரான நான், அந்த உத்தரவை மீறி, எனது தனிப்பட்ட கருத்தை முன்வைக்க முடியுமா?’  என்னும் அளவிலேயே, அரசாங்கத்தின் எந்த ஒரு உத்தரவுக்கும் அரசு ஊழியர்கள் கட்டுப்பட்டு நடந்துவருகிறார்கள். விதிவிலக்காக, ‘அரசாங்கம் சொன்னதற்கெல்லாம் தலையாட்ட முடியாது’ என்கிற ரீதியில், தனது கருத்தை உரிய காரணங்களை விளக்கி காவல் துணை ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு தலைமைக்காவலர்.

 

தமிழக அரசோடு எந்த விஷயத்தில் தலைமைக் காவலர் முரண்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ, தமிழக அரசு எடுத்துவரும் மனிதநேய நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்வோம். 


முதல்கட்டமாக, 9000 மெட்ரிக் டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என ரூ.45 கோடி மதிப்பிலான பொருட்களை, தமிழக அரசு இலங்கைக்கு கப்பலில் அனுப்பிவைத்துள்ளது. தமிழ்நாடு அரசால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொருளாதார நிவாரண உதவித் திட்டத்திற்கு, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

 
தலைமைக் காவலர் விஷயத்துக்கு வருவோம். அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுக்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை காவலரோ, இலங்கைக்கு உதவுவதில் எனக்கு விருப்பமில்லை எனக் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். 


1. பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்கள், இலங்கை நாட்டினர்.

2. நமது தமிழ் இனத்தைக் கொன்று குவித்தது இலங்கை அரசாங்கம்.

3. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, காவல்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணம் இலங்கையர்.

4. அரசுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்புவித்த, பெற்ற பணபலனைத் தற்போது ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தல் ஆணையை அரசு ரத்து செய்ததால், ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதிய பலன் பாதிக்கப்பட்டுள்ளது.

5. தற்போது மத்திய அரசு DA அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இன்று வரை DA அறிவிக்கவில்லை.

6. நீதியரசர் கிருபாகரன் காவலர்களுக்கான ஊதியக் குறைவினை ஏற்றித் தர பலமுறை கோரியும், தமிழக அரசு இதுநாள் வரை செவி சாய்க்கவில்லை.

 

Highcourt Head Constable written letter to assistant commissioner

 

எனக் குறிப்பிட்டுவிட்டு, ‘தன்னை மிஞ்சி தான் தான தர்மம். அண்டை நாடான இலங்கைக்கு தமிழக அரசு நல்ல எண்ணத்தில்தான் உதவுகிறது. ஆனால், எனது குடும்பத்தைப் பராமரிக்கவே என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை. அதனால், எனது ஒரு நாள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

 
இந்நிலையில், விருதுநகர் கன்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன்  சொன்னதாக ஒரு காவலர், ‘இலங்கை நிவாரண நிதிக்கு ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூபாய் நூறாவது கொடுத்துத்தான் ஆகணுமாம். அதற்கு மனு எழுதிக்கொடுக்கச் சொல்லுறாங்க. அந்த மனுவை இன்றே கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை, ரூ.100-க்கு மேல் கொடுக்க நினைத்தால், அதை மனுவில் குறிப்பிட வேண்டும். மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் எழுதுபவர்கள், தொகை எவ்வளவு என்பதைக் குறிப்பிட வேண்டும். காவலர்களின் மனுக்கள் இன்று மாலைக்குள் கேம்பஸுக்கு வந்துவிடவேண்டும்’ என ஓபன் மைக்கில் பேசியதும் சர்ச்சையாகியுள்ளது.

  
தமிழக அரசு, நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அரசுக்கு உதவும் விஷயத்தில், காவல்துறை வட்டாரத்திலும் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.