Advertisment

திமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு! -சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மனு!

திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை, எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

highcourt on dmk mla subramanian case

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க - எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்ரமணியன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார், பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisment

இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக உள்ள மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கை, எம்.பி - எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு வழக்கை மாற்றக் கோரி மனுதாரர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்த போது , அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவதில் ஆட்சேபம் இல்லை எனத் தெரிவித்தார்.

வழக்கை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளருடன் கலந்தாலோசிப்பதாக தெரிவித்த நீதிபதி, மனு குறித்து காவல்துறை, மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe