highcourt chennai thirumavalavan

Advertisment

கடந்த செப்டம்பர் மாதம், ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொலிக் கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி, பெண்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது.

லோக்சபா விதிகளுக்கு மீறி செயல்பட்டுள்ள திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, லோக்சபா விதிகள் குழுவுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ‘சனாதன தர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தவில்லை. அந்தக் கருத்தை திருமாவளவன் திரித்துக் கூறியுள்ளார். அதன் மூலம், நடத்தை விதிகளை மீறியுள்ளார். பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.

Advertisment

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது. அப்போது, ‘திருமாவளவன் பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி, விதிகள் குழுவுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? திருமாவளவன் மட்டும்தான் பெண்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறாரா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், ‘திருமாவளவனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இரண்டு மாதங்களில் விசாரணை முடிக்கப்படும். அவரது பேச்சு அடங்கிய வீடியோவை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.