Skip to main content

பா.ம.க.வினர் போராட்டத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம்: அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

highcourt chennai pmk

 

சென்னையில் பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, புதன்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, பத்திரிக்கையாளர் வாராகி தரப்பில், "வன்னியர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி, சென்னையில் செவ்வாய்க்கிழமை  போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க.வைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், திரும்பிச் செல்லும்படி கூறினார். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

பேருந்து மற்றும் ரயில் மீது கற்களை வீசி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே, போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தைத் தடை செய்ய வேண்டும். போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" எனவும் முறையிடப்பட்டது. மனுவாகத் தாக்கல் செய்தால், எந்த அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதைப் பதிவுத்துறை முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.