Skip to main content

ஏரியின் குறுக்கே தனியார் நிறுவனம் பாலம் கட்டுவதற்கு எதிரான வழக்கு! -அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

highcourt chennai

 

திருவள்ளூர் -மேல்நல்லாத்தூர் ஏரியின் குறுக்கே, தனியார் நிறுவனத்திற்காக பாலம் கட்டப்படுவதை எதிர்த்த புகார் மீது, நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆதிகாத்தூர் கிராமத்தில், பி.ஏ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், மேல்நல்லாத்தூர் ஏரி மீது பாலம் கட்டுவதற்கு, தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பட்டறை கிராமத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பி.ஏ.சி ஆட்டோ மொபைல் நிறுவனம், மேல்நல்லாத்தூர் ஏரியை சேதப்படுத்தியுள்ளது. முன் அனுமதியின்றி கழிவுகளைத் தேக்கி வைத்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் அரசுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கருத்துகளைக் கேட்காமல், ஏரியின் குறுக்கே பாலம் கட்ட அனுமதித்தது சட்டவிரோதமானது என்பதால், பாலம் கட்ட அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாலம் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துக்கு ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

Ad

 

இதையடுத்து, பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் அளித்த புகார் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 15 நாட்களுக்குத் தள்ளி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்