highcourt chennai

Advertisment

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையைத் தடுப்பதற்காக, கடந்த 1989-ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும், மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கண்காணிப்புக் குழுவைக் கூட்டி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து, மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள், அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என, கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் டியம் டேய் சார்பில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் குழு, கடந்த 2019- ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 8- ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. நிர்வாக காரணங்களால், உயர்நிலை கண்காணிப்புக் குழு கூட்டம் கடந்த 2013- ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாத போதிலும், தலைமைச் செயலாளர் தலைமையில், சமூக நலத்துறை மற்றும் மனித உரிமை பிரிவு ஏ.டி.ஜி.பி.,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் முன்னிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இது தவிர, ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கத் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ad

தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் தேக்கம் குறைந்துள்ளதோடு, அத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

தொடர்ந்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இனி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலைக் கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.