ADVERTISEMENT

பணியிடை நீக்க உத்தரவு ரத்தாகியும் ஓய்வுகால பலன்கள் வழங்காததை ஏற்கமுடியாது! – பொதுப்பணித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

12:02 AM Aug 02, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பணியிடைநீக்க உத்தரவு திரும்பப்பெறப்பட்ட பின்னரும், ஓய்வுகால பலன்களைத் தராமல் காலம் தாழ்த்தும் பொதுப்பணித்துறையின் செயல்பாட்டை ஏற்கமுடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சகாய மாதாபட்டணத்தைச் சேர்ந்த டி.சங்கர், 1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, 2007-ஆம் ஆண்டு டிசம்பர் முதல், உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். 2018-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, அவர் ஓய்வுபெற இருந்தார். செயற்பொறியாளர் பதவி உயர்விற்கான பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவர் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்து, பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில், அவர் ஓய்வுபெற இயலாத சூழல் ஏற்பட்டது.

பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, ஓய்வுகால பலன்களை முழுமையாக வழங்கிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, மனுதாரர் சங்கர் மீதான குற்றச்சாட்டுகளில் சில மட்டுமே உறுதியானதால், அதற்கான, துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன், பணியிடைநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாகவும், ஓய்வூதியத்திலிருந்து குறைந்தபட்ச தொகையாக, மாதமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட வேண்டுமென்றும், இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார். பணியிடைநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டதால், ஓய்வூதிய தொகையில் 24 ஆயிரம் ரூபாயைத் தவிர, பிற முழுமையான பணப்பலன்களை வழங்க வேண்டுமென வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல், மனுதாரரின் ஒருமித்த கருத்தோடுதான் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பணி ஓய்வுபெறும் போது வழங்க வேண்டிய பலன்களை வழங்காமல் இருந்த பொதுப் பணித்துறையின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதன் காரணமாகவே, மனுதாரர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மனுதாரரின் பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், அதன்படி மனுதாரருக்கு கிடைக்கவேண்டிய அனைத்துப் பலன்களையும் கணக்கிட்டு நான்கு மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT