
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் வணிக நோக்கில் கட்டிடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ சமய அறக்கட்டளையாக, தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீன மடத்துக்குச் சொந்தமாக, திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் இருந்த திருமண மண்டபம் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த இடத்தின் குத்தகைதாரர், நிலத்தைக் காலி செய்து கொடுத்தபின், அங்கு மூன்று மாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கட்டிடம் அனுமதியின்றி கட்டப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த சுந்தர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருமபுரம் ஆதீன மடம், தற்போது அறப்பணிகளில் அக்கறை காட்டாமல்,வருவாய் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அனுமதியின்றி இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு மடத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மடம் என்பது அரசு அமைப்பு என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை என்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடர, இந்த உத்தரவு தடையாக இருக்காது என்பதையும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)