Highcourt chennai

ஆளும்கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனி மனித விலகலைப் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்த நிகழ்ச்சியிலும், அதன்பின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்தியபோதும், அதிமுகவினர், கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி,திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், அரசை நடத்தும் அமைச்சர்களும், எம்.எல் ஏ.க்களும், கரோனா விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, கட்சியினரை ஒன்றுகூட அனுமதித்துள்ளனர். விதிகளைப் பின்பற்றி, உதாரணமாக இருக்கவேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட நாளில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisment

மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களில் இருந்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், தனிமனித விலகல் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மை மையத் தலைவருக்கு உத்தரவிட்டனர்.